சென்னை: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று (ஜன.22) நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, தனுஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆர்எஸ்எஸ், ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து அழைப்பிதழ், அட்சதை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தமிழ்நாடு தலைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் கூறியதாவது: நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் கனவான அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் மற்றும் அட்சதை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 90 லட்சம் வீடுகளுக்கு அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இன்று மதியம் 12 மணி முதல் ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாலை 6 மணிக்கு வீடுகள்தோறும் கார்த்திகை தீபம்போல குறைந்தது 5 அகல் விளக்குகளை ஏற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.