சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் ஏற்கனவே பூத் கமிட்டி அமைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. பூத் கமிட்டிக்கான காலக்கெடு முடிந்த நிலையில், இன்றைய தினத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் ஒருசில வாரங்களில் அறிவிக்கப்படலாம். அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தல் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கக்கூடிய முதல் தேர்தல் என்பதால், வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்பது போன்ற ஆலோசனைகளும், அதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள சில உத்தரவுகளை பழனிசாமி பிறப்பிக்கலாம் என்பதால் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி பேச்சு: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, “பொதுத்தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி அமைப்போம். கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும் அதிமுக வேடர்பாளர்களை இறுதி செய்யலாம்.” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.