சென்னை: 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்த போட்டிக்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கால்பந்து ரசிகர்களால் ‘மெரினா அரங்கம்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மைதானம் 1993-ம் ஆண்டு கட்டப்பட்டது. புகழ்மிக்க இந்த மைதானம் 30 வருடங்களுக்குப் பின்னர் தற்போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிக்காக சுமார் ரூ.25 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் முக்கிய நிகழ்வான தடகள போட்டிகள் மற்றும் கால்பந்து போட்டிகளின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
மைதான மறுசீரமைப்பின் முக்கிய பகுதியாக தடகள ஓடுபாதை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ‘டெரகோட்டா செங்கல் சிவப்பு’ நிறமுடைய பழைய ஓடுபாதை நீக்கப்பட்டு நீல நிறத்திலான ஓடுபாதை நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த நீல நிற ஓடுபாதை ஆந்திர மாநிலம் குண்டுரில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் உள்ளது.
இந்த நீல நிற ஓடுபாதை சர்வதேச அளவில் முதன்முறையாக கடந்த 2013-ம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் (2016-ம் ஆண்டு) நீலநிற தடகள ஓடுபாதை பயன்படுத்தப்பட்டிருந்தது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீலநிற தடகள ஓடுபாதை 400 மீட்டர் கொண்டதாகும். இரவில் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக மின்விளக்குகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஎம்எக்ஸ் ராட்சத மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் போட்டியின் முடிவுகளை பார்வையாளர்கள் காணும் வகையில் புதிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கான இருக்கைகளும் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
கண்கவரும் வகையில் மைதானத்தின் வெளிப்புற பகுதிகளில் வண்ணப்பூச்சு கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்குடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள சென்னை நீச்சல் வளாகம், நேரு பூங்காவில்உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம் போன்ற பிற மைதானங்களும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது.
டிராக் சைக்கிள் பந்தயம் நடத்துவதற்காக வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இந்த போட்டிகளை நடத்துவது என்றால் டெல்லிக்குதான் செல்ல வேண்டும். ஆனால் தற்போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் டிராக் சைக்கிள் பந்தயத்துக்கான பாதையை சிறப்பாக வடிவமைத்து வருகிறது.
துப்பாக்கி சுடுதல் மையம்… கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் அலமாதியில் உள்ள சிவந்தி ஆதித்தன் துப்பாக்கி சுடுதல் மையத்திலும், வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் மைதானத்திலும் நடைபெற உள்ளன. குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சர்கஹி துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் ரைபிள், பிஸ்டல் பிரிவுகளுக்கான போட்டி நடைபெற உள்ளது.
உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 50 மீட்டர் பிரிவில் 24 துப்பாக்கி சுடும் பாதைகளும், 25 மீட்டருக்கு 28 துப்பாக்கி சுடும் பாதைகளும், 10 மீட்டருக்கு 40 துப்பாக்கி சுடும் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பயிற்சி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.