சென்னை: தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசியதாவது:
முந்தைய செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் ஒருவிதமான பதற்றம் காணப்பட்டது. சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வென்றுவிட்டோம். தேர்தல் ஆணையமும் நம்மை ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனால் இந்தக் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள். என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்லாமல், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார். மழை பெய்து முடித்தவுடன் முதல்வர் நேரடியாக அங்கு சென்றிருந்தால் அதிகாரிகளும் துரிதமாக செயல்பட்டிருப்பார்கள். அவ்வாறு செய்ததால்தான் ஏராளமான பொருட்சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண நிதியை வழங்காமல் மத்திய அரசை எதிர்பார்த்துள்ளனர்.
மக்கள் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசும் தங்கள் பொறுப்பை உணர்ந்து மக்களுக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். மத்திய அரசைக் காரணம் கூறி, தமிழக அரசு தப்பித்துக் கொள்ளக் கூடாது. எந்த ஆட்சிக் காலத்திலும் தமிழக அரசு கேட்கும் நிதியை ஒருபோதும் மத்திய அரசு கொடுத்ததில்லை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பாஜக ஆட்சியும் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போலத்தான் பார்க்கின்றன. பேரிடரைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி தரவேண்டும். இதை தங்கள் கடமை என மத்திய அரசு உணர வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தேர்தலில் யார் பிரதமர் என்று மக்கள் பார்ப்பதில்லை. அவர்களின் பிரச்சினைகளுக்கு யார் குரல் கொடுக்கிறார்கள் என்றுதான் பார்க்கின்றனர். அதன்படி மக்களை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க, தேவையான நிதியைப் பெறுவதற்கு, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிமுக எம்.பி.க்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
கூட்டணி தர்மம் என்று பார்க்க வேண்டிய நிலை தற்போது நமக்கு இல்லை. காவிரி பிரச்சினைக்காக 37 அதிமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பியதால் 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், நீட் தேர்வுக்காக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தைரியம் இருக்கிறதா?
நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு அதிமுகதான் அரணாக இருக்கிறது என்று அவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். அதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது. அதிமுகவை விமர்சிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.இவ்வாறு பழனிசாமி பேசினார்.
முன்னதாக அதிமுக நிர்வாகிகள் 325 பேர், முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 337 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரணத்தை வழங்காமலும் உள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பான மரபுகளைக் கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம், காவிரி விவகாரத்தில் திமுகவின் சந்தர்ப்பவாதம், அதிமுக திட்டங்களை முடக்குவதற்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மக்களவையில் பாதுகாப்பு குறைபாட்டால் கடந்த 13-ம் தேதி நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது, ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும், குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.