சென்னை: வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு ஆகியுள்ளது. ஆனாலும், விசாரணை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்துவிட்டது முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. தமிழகத்தில் 30 சதவீத பள்ளிகளில் பட்டியலின மாணவர்களுக்கு எதிராக சாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுவதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூகநீதி என்று படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக, பட்டியலின மக்கள் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை எடுத்து, உங்கள் வாக்கு அரசியலுக்காக வேறு திட்டங்களுக்கு செலவிட்டீர்கள் அல்லது செலவே செய்யாமல் திருப்பி அனுப்பினீர்கள். பொதுமக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. காலாகாலமாக உங்களது மேடை நாடகங்களை நம்பியிருந்தனர். ஆனால், இனியும் அவர்கள் ஏமாறமாட்டார்கள்.
பாமக தலைவர் அன்புமணி: சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும், வேங்கைவயல் கொடூரத்துக்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இதில் தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. உண்மை குற்றவாளிகளை கைது செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதிலும் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அதேபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. விளைவுகளுக்கு அஞ்சி, அந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன அல்லது திசை திருப்பப்படுகின்றன. இதே நிலை தொடரக் கூடாது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது அநீதி. பாதிக்கப்பட்ட மக்கள் மீதான தமிழக அரசின் அக்கறையின்மையை இது காட்டுகிறது. தவிர, பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற அவல சம்பவங்கள் அரங்கேறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.