Breaking News
Home / செய்திகள் / நள்ளிரவில் கசிந்த வாயு; நைட் ஷிஃப்ட் முடித்து வந்தவர்களால் தப்பிய கிராமங்கள் – எண்ணூர் ஸ்பாட் விசிட்

நள்ளிரவில் கசிந்த வாயு; நைட் ஷிஃப்ட் முடித்து வந்தவர்களால் தப்பிய கிராமங்கள் – எண்ணூர் ஸ்பாட் விசிட்

சென்னை எண்ணூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான உரத்தொழிற்சாலை ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரவு 12.00 மணியளவில் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பெரிய குப்பம், சின்னக்குப்பம் பகுதிகளைச் சுற்றி ரசாயன வாடை அடித்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு இரவோடு இரவாக வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக நமக்குத் தகவல் வந்தது. கடலுக்கு செல்லும் தொழிற்சாலை பைப்

உடனடியாக ஜூனியர் விகடன் குழு எண்ணூரில் அந்த தனியார் உரத்தொழிற்சாலை உள்ள பகுதிக்கு விரைந்தது. பெரிய குப்பம் பகுதியில் வசிக்கும் சிலரிடம் பேசினோம், “இரவு 12.30 மணிபோல நைட் ஷிப்ட் முடித்து வந்தவர்கள், எங்கள் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக ரசாயன வாடை இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தொண்டை, கண் எரிச்சலும் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக எங்கள் பகுதியில் உள்ளவர்களை எழுப்பி விவரத்தைச் சொன்னார்கள்.

நாங்கள் எங்கள் பகுதியைச் சுற்றி உள்ள அனைவரையும் இரவோடு இரவாக எழுப்பி தகவலைச் சொன்னோம். அந்த அரைமணி நேரத்துக்குள்ளேயே இந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்படப் பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை பைக், ஆட்டோ என்று கிடைத்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். அரசு தரப்புக்கும் தகவல் தெரிவித்தோம். பேருந்து, ஆம்புலன்ஸ் எல்லாம் ஒரு மணிபோல வந்தது. மயக்கமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர்கள்

பெரிய குப்பம், சின்ன குப்பம் என மொத்தமாக இரண்டு கிராம மக்களும் இரவோடு இரவாகக் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டோம். அதேபோல தொழிற்சாலைக்கு அந்த பக்கமும் எட்டு கிராமங்கள் இருக்கின்றன. அங்கும் காற்றில் ரசாயனம் கலந்து சென்றுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் வேறு இடங்களுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டனர். ஒருவேளை, அந்த நைட் ஷிஃப்ட் முடித்து வந்தவர்கள் எங்களுக்குத் தகவல் சொல்லவில்லை என்றால் தூக்கத்திலேயே என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கும்” என்றார்கள் அந்த அதிர்ச்சி விலகாமல்.

பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர் கஜேந்திரனிடம் பேசினோம், “அந்த உரத்தொழிற்சாலைக்கு ரசாயனம் செல்லும் பைப் கடலில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு இருக்கிறது. கப்பல் வந்து அந்த பைப் வழியாகவே ரசாயனத்தை உள்ளே அனுப்பும். இன்று இரவு சுமார் 12.00 மணியளவில் கடலில் செல்லும் பைப் வெடித்ததைக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பார்த்திருக்கிறார்கள். காற்று பெரிய குப்பம் பக்கமாக வீசியதால் ரசாயனம் உடனடியாக காற்றில் பரவி பலரையும் பாதித்திருக்கிறது. கிராம மக்கள் ரசாயனத்தின் நெடி தாங்காமல் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். கஜேந்திரன்

உடனடியாக பேருந்துகள், ஆம்புலன்ஸ் வந்ததால் மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். இன்னும் பெண்கள், குழந்தைகள் பலர் மயக்கம் போட்டு விழுந்தார்கள். புயல் வெள்ள சமயத்தில் எண்ணூர் பகுதியில் எண்ணெய்க் கழிவு கொட்டிய பாதிப்பிலிருந்தே இன்னும் நாங்கள் மீளவில்லை. இதில் புதிதாக இந்த பிரச்னை வேறு வந்து நிற்கிறது. கடலில் ரசாயனம் கலந்து வெள்ளை நிறமாக மாறியிருக்கிறது. இதனால் இந்த பகுதியில் மீன்பிடிக்க முடியாது. எங்கள் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறோம்” என்றார் விரக்தியில்.

அம்மோனியா கசிவு தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அம்மோனியா பரிமாற்றத்துக்கு முன்பாக குழாய் முன் குளிரூட்டும் செயல்பாட்டின் பொது அம்மோனியா வாயு கசிவு குறித்து 12.45 மணியளவில் தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2.15 மணியளவில் யூனிட் மற்றும் பைப்லைன் இடங்களை ஆய்வு செய்தனர். பெரிய குப்பம், சின்னக்குப்பம் மற்றும் சில கிராமங்களிலிருந்து அம்மோனியா துர்நாற்றம் குறித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் குறித்து, உள்ளூர் காவல் உதவி ஆணையரிடம் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சிலர் கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக முதலுதவி சிகிச்சையும் பெற்றனர். தொழிற்சாலை வாயில்

கடலில் எடுக்கப்பட்ட மாதிரியில் கடலில் 5 mg/L இருக்க வேண்டிய அம்மோனியாவின் அளவு 49 mg/L இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, அதிகாலை 3.30 மணியளவில் தொழிற்சாலை வாசல் கேட் அருகே காற்றில் 400 microgram/m3 இருக்க வேண்டிய அம்மோனியா 2090 microgram/m3 இருந்தது. அதிகாலை 4.30 மணியளவில் சின்னக்குப்பம், பெரிய குப்பம் கிராமங்கள் அருகே லேசான அம்மோனியா துர்நாற்றம் வீசியது. ஒரு நாளுக்குள் குழாய் சேதத்தின் சரியான இடம் மற்றும் அளவைக் கண்டறிந்து அம்மோனியா பரிமாற்றத்தைத் தொடங்குவதற்கு முன்பு அதைச் சரிசெய்வோம் என்று தொழிற்சாலை தெரிவித்துள்ளது. மேற்கூறிய பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலுடன் மட்டுமே குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ளவும் தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எங்கள் வழக்கமான செயல்பாட்டின் போது, 26/12/2023 அன்று 23.30 மணி அளவில் ஆலை வளாகத்திற்கு வெளியே கடற்கரையோரத்திற்கு அருகே அம்மோனியா இறக்கும் பைப்லைனில் ஒரு அசாதாரணத்தை நாங்கள் கவனித்தோம். உடனடியாக எங்களின் தடுப்பு நடைமுறை உடனடியாக செயல்படுத்தப்பட்டது. மேலும் நாங்கள் அம்மோனியா இருப்பை தனிமைப்படுத்தி, குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். செயல்பாட்டின் போது, உள்ளூர் மக்கள் சிலர் அசௌகரியத்தை உணர்ந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இயல்பு நிலை திரும்பியுள்ளது. சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *