சென்னை: செங்கல்பட்டு அருகே சரக்கு ரயிலில் 10 பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்காரணமாக, மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் சேவை நேற்று பாதிப்படைந்தது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பல விரைவு ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகின. திருச்சிராப்பள்ளி சரக்கு கொட்டகையில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை துறைமுகத்துக்கு இரும்பு மூலக்கூறுகள், உலோக தகடுகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, 42 பெட்டிகளுடன் ஒரு சரக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் விழுப்புரம் வழியாக நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது.
தொடர்ந்து, ரயில் புறப்பட்டபோது, பரனூர் ரயில் நிலையத்துக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் இரவு 10.17 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது. 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சரக்கு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரயிலின் சக்கரங்களை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணி தொடங்கியது.இந்தப் பணி நேற்று காலை வரை நீடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
சரக்கு ரயில் மட்டும் தடம் புரண்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பிரதான ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளதால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், 2 தண்டவாளங்களில் அதிக ரயில்கள் இயக்க முடியாததால், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு புறப்பட்ட மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு பகுதியில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில்களும் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்பட்டன.
ரயில்சேவை பாதிப்பால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக செல்வோரும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுபோல, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த நெல்லை, அனந்தபுரி, கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர் உட்பட முக்கிய விரைவு ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகின. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையில், இந்தப்பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, நேற்று மாலை 3.50 மணிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதன்மூலமாக, சுமார் 18 மணி நேரத்துக்கு பிறகு, ரயில் இயக்கம் மீண்டும் சீரானது. மேலும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.