சென்னை: அதிமுக சார்பில் மழை வெள்ள நிவாரணம் வழங்கியபோது நெரிசலில் சிக்கி 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கடந்த 9-ம் தேதி அதிமுக சார்பில், வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை பொதுச் செயலாளர் பழனிசாமி வழங்கினார். கொருக்குப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள பகுதிகளை பார்வையிட்ட பழனிசாமி, பின்னர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு ஒரே நேரத்தில் கூடினர். நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தண்டையார்பேட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி யுவஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸார் மர்ம மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து, ஆர்டிஓ விசாரணைக்கு போலீஸார் பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து வடசென்னை கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து, விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.