அயர்லாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் போட்டியில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.
ஹராரேவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 32, கரேத் டெலானி 26, ஹாரி டெக்டர் 24, லார்கன் டக்கர் 21 ரன்கள் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்களையும் முசரபானி, ரிச்சர்ட் கரவா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கியது. 2 ஓவர்களில் வெற்றிக்கு 13 ரன்களே தேவையாக இருந்தது. சிக்கந்தர் ராஸா, லூக் ஜாங்வே களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை வீசிய மார்க் அடேர் ஒரே ஓவரில் 2 விக்கெட்கள் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. லூக் ஜாங்வே 2 ரன்னிலும், சிக்கந்தர் ராஸா 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்னிலும் அடேர் பந்தில் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் வெறும் 4 ரன்களே சேர்க்கப்பட்டிருந்தது.
மெக்கார்த்தி வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவையாக இருந்தது. இதில் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட 4-வது பந்தில் ரிச்சர்ட் கரவா பவுண்டரி அடித்தார். 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மெக்கார்த்தி (5) ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு மேலும் அதிகமானது. எனினும் கடைசி பந்தில் முசரபானி 2 ரன்கள் சேர்க்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முசரபானி 2, டிரெவர் குவாண்டு 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.