Breaking News
Home / செய்திகள் / நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது என்பதற்கு இபிஎஸ் கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை: நீதிமன்றம்

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது என்பதற்கு இபிஎஸ் கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை: நீதிமன்றம்

சென்னை: அவதூறு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாததற்கு முன்னாள் முதல்வர் இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என தெரிவித்துள்ள நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் கூறியுள்ளனர்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி, கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

பாதுகாப்பு காரணங்கள்: இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, மாஸ்டர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தன்னால் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தனது வீட்டிலேயே வைத்து சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி, பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக பழனிசாமிக்கு விலக்கு அளித்தும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில் “உயர் நீதிமன்ற வளாகம் ஏற்கெனவே சிஐஎஸ்எஃப் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இயங்கி வருவதால் பழனிசாமி நேரில் ஆஜராகும்போது அவருடைய பாதுகாப்புக்கு எந்த குளறுபடியும் ஏற்படாது” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது “எதன் அடிப்படையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு கோரப்பட்டது” என்றார்.

டிச.15-க்கு தள்ளிவைப்பு: அப்போது நீதிபதிகள், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த விஷயத்தில் நேரில் ஆஜராக இயலாது என பழனிசாமி தரப்பில் கூறப்படும் காரணங்களில் உடல்நிலையைத் தவிர்த்து மற்ற காரணங்கள் எதுவும் ஏற்கும்படியாக இல்லை” என கருத்து தெரிவித்தனர்.

அதையடுத்து, பழனிசாமி தரப்பில் இதுதொடர்பாக விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டு எனக் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிச.15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *