Breaking News
Home / செய்திகள் / மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து உரங்களும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து உரங்களும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: யூரியா, டிஏபி உள்ளிட்ட அனைத்து உரங்களும் கிடைக்க, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி நடவு தீவிரமடைந்திருக்கும் நிலையில், அடியுரமாகவும், மேலுரமாகவும் பயன்படுத்துவதற்குத் தேவையான யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

தனியார் உரக் கடைகளில் தொடங்கி, கூட்டுறவு சங்கங்கள் வரை எங்கும் உரங்கள் கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும், வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவில் பெய்யுமா என்ற சந்தேகத்தாலும் நடப்பாண்டில் மிகவும் தாமதமாகத் தான் சம்பா, தாளடி நடவுப் பணிகளை காவிரிப் பாசன மாவட்டங்களின் விவசாயிகள் தொடங்கினர்.

பல்லாயிரம் ஏக்கரில் இன்னும் நடவுப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த சூழலில், உரத்தட்டுப்பாடு பிரச்சினை போக்கப்படவில்லை என்றால், சம்பா, தாளடி சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து விடும். சம்பா, தாளடி நடவு தாமதமானால், நெற்பயிர்கள் கதிர் விடும் காலத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல், மகசூலும் பாதிக்கப்படும். விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

நடப்பாண்டு மட்டுமின்றி, ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பா மற்றும் தாளடி நடவு தொடங்குவதற்கு முன்பாக டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சம்பா மற்றும் தாளடிப் பருவத்துக்காக விநியோகிக்கப்படும் டிஏபி, பொட்டாஷ் உரங்கள் இதுவரை விற்பனைக்காக சந்தைக்கு வராதது தான் இத்தகைய தட்டுப்பாட்டுக்கு காரணமாகும்.

நடப்பு பருவத்துக்கான உர மானியத்துக்கு கடந்த அக்டோபர் 25-ம் தேதியே மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து விட்டது. அதன் பிறகும் உரங்கள் போதிய அளவில் சந்தைக்கு வராமல் இருக்க, நியாயமான காரணங்கள் இல்லை. டிஏபி உரம் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவே தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம்.

காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்து நடத்தி, டிஏபி, யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *