சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி பரவலாக கனமழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.9) ஒருநாள் மழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காலை 10 மணி வரை கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி என 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.