விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், நாகாலாந்து அணியுடன் மோதிய தமிழ்நாடு 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்துவீசியது. வருண் சக்ரவர்த்தி – சாய் கிஷோர் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நாகாலாந்து 19.4 ஓவரில் வெறும் 69 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சுமித் குமார் அதிகபட்சமாக 20 ரன், ஜோஷுவா ஒஸுகும் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
தமிழ்நாடு பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 5 ஓவரில் 3 மெய்டன் உள்பட 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சாய் கிஷோர் 3, சந்தீப் வாரியர், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 70 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு 7.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன் எடுத்து அபாரமாக வென்றது. சாய் கிஷோர் 37 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), நாராயண் ஜெகதீசன் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழ்நாடு அணி 6 போட்டியில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இ பிரிவில் 2வது இடம் பிடித்ததுடன் நாக்-அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.
* ஏ பிரிவில் ஒடிஷா அணியுடன் மோதிய மும்பை அணி 86 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஒடிஷா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. கார்த்திக் பிஸ்வால் 64, கோவிந்தா 39, சந்தீப் பட்நாயக், அபிஷேக் ராவுட் தலா 35 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய மும்பை 32.3 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டது.
* மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் திரிபுரா அணியை எதிர்கொண்ட புதுச்சேரி அணி 25 ரன் வித்தியாசத்தில் தோற்றது. திரிபுரா 47.3 ஓவரில் 160 ரன் ஆல் அவுட் (பிக்ரம்ஜித் 75*); புதுச்சேரி 40.1 ஓவரில் 135 ஆல் அவுட்.