சென்னை: சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.
இதனால், அருகில் இருந்த காஸ் நிலைய அலுவலகம் சரிந்து நீரில் மூழ்கியது. இதில், 2 ஊழியர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மாயமான மேலும் 2 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி, 5 பர்லாங் சாலை – வேளச்சேரி சாலை இணைப்பில் வாகனங்களுக்கான காஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே 7 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட 25 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. புயல் காரணமாக கட்டுமான பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டதால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றும் கனமழை பெய்தது. காலை 7 மணியளவில் கிண்டியில் இருந்து மழை நீர் வெளியேறியது. இந்த தண்ணீர் சாலையில் தேங்கிய போது கட்டு மான பணிக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கியது. அப் போது பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அருகில் உள்ள காஸ் நிலைய அலுவலக அறை, கழிவறை ஆகியவை சரிந்து பள்ளத்தில் விழுந்தன.
இதில் கட்டிடத்துடன் அதில் இருந்த 4 ஊழியர்கள் பள்ளத்தில் சரிந்து விழுந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், கிண்டி போலீஸார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந் தனர். 2 பேரை கயிறு கட்டி மீட்டனர். மீதம் உள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.