சென்னை: சென்னையில் தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புக்குள்ளான இடங்களை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார். அவர், அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை கூட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே மண்டலந்தோறும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுடன் ஆலோசனை செய்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மழை காலங்களில் நீர் தேங்காமல் இருந்தது.
ஆனால் திமுக ஆட்சியில் நேற்று முன்தினம்தான் மழை பாதிப்புக்கான ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வேடிக்கையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் வானிலை அறிவிப்பு வந்ததும்மக்களுக்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். ஆனால் திமுக ஆட்சியில் எந்த ஆலோசனையும் வழங்காததாலேயே உணவு பொருட்களை மக்கள் இருப்பில் வைக்கவில்லை. உணவுக்குகூட வழியில்லாமல் அல்லல்படுகின்றனர். திமுக அரசு திட்டமிட்டு பணியைமேற்கொள்ளாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. என்எல்சி நிறுவனத்திடம் இருந்து ராட்சத மோட்டார்களை வாங்கி நீரை அப்புறப்படுத்த இருப்பதாக தலைமைச் செயலர் கூறுகிறார். என்றைக்குமோட்டார் வாங்கி, எப்போது நீரை வெளியேற்ற போகிறார்கள். இது திட்டமிட்டு செயல்படாத அரசு என்பது நிரூபணமாகிவிட்டது.
சென்னையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மழைநீர் வடிகால்அமைத்ததால், நீர் தேங்காது எனமுதல்வரும், அமைச்சர்களும் வீரவசனம் பேசினார்கள். ஆனாலும்ஏன் நீர் வடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து35 ஆயிரம் கன அடிதான் திறக்கமுடியும். முதல்வர் இப்போதாவதுபார்த்து அறிந்து கொள்ள வேண்டும். செம்பரம்பாக்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ஏரிகளில்உள்ள உபரிநீர் அடையாற்றுக்கு வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சாதாரண மழைதான். இதைகூட தாக்குபிடித்து மக்களுக்கான உதவிகளை அரசால் செய்ய முடியவில்லை. இனியாவது போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, மீட்புப் பணிகளைமேற்கொள்ள வேண்டும். அதேநேரம், தேவையான உதவிகளை வழங்க வேண்டும். கார்பந்தையம் நடத்த எதற்கு ரூ.42கோடி செலவு. இந்தத் தொகை,கடலில் பேனா வைப்பதற்கான தொகை போன்றவற்றை நீர் தேங்காமல் இருக்க செலவு செய்யலாம். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.