சென்னை: வங்கக் கடலில் நிலவிய மிக்ஜாம் தீவிர புயல் தாக்கம் குறைந்ததையொட்டி சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெயில் அடிக்க தொடங்கியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கிய போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதிகனமழையாக கொட்டியது. மீனம்பாக்கத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. பல்வேறு இடங்களில் வெள்ளநீரின் நடுவே இயக்கப்பட்ட இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பல பழுதாகி நின்றன. அவற்றை தள்ளிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், தங்கள் உடைமைகளை பாதுகாக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
இந்த நிலையில், தற்போது மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் அருகே பாபட்லா எனும் பகுதியை நோக்கி சென்று விட்டதால், தற்போது சென்னையில் மழை இல்லை. இரண்டு தினங்களுக்குப் பிறகு வானம் தெளிந்து லேசான வெயில் அடிக்கிறது. பல்வேறு இடங்களில் வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது.