சென்னை: வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அமீரும் நடிக்கவிருப்பதால், சூர்யா விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.
அமீருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த சூர்யா
சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் டைட்டில் அப்டேட்டில் ‘புறநானூறு’ என லீட் கொடுத்துள்ளது படக்குழு. இதனிடையே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக சொல்லப்பட்டது.
அதாவது சூர்யாவின் 43வது படமாக உருவாகவிருந்தது வாடிவாசல் தான். ஆனால், வெற்றிமாறன் தற்போது விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், வாடிவாசல் இன்னும் தொடங்கவில்லை. அதேநேரம் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளதாக வெற்றிமாறன் அறிவித்தார்.
மிக முக்கியமான கேரக்டரில் அமீர் நடிக்கவிருப்பதாகவும் வெற்றிமாறன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தான் பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. அதாவது இயக்குநர் அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான மோதல் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது. இந்த சம்பவம் குறித்து பேட்டிக் கொடுத்திருந்த ஞானவேல்ராஜா, வாடிவாசலில் இருந்து சூர்யா தன்னை நீக்கிவிடக் கூடாது என அமீர் பயப்படுவதாக பேசியிருந்தார்.
இதனால் அமீரை விட்டுக் கொடுக்காத வெற்றிமாறன், அவருடன் வாடிவாசல் கதை குறித்து விவாதித்த போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சிக் கொடுத்தார். அதாவது யாருக்காகவும் வாடிவாசல் படத்தில் இருந்து அமீரை தூக்க மாட்டேன் என அதிரடி காட்டினார். சூர்யாவும் வாடிவாசல் படத்தில் நடிக்க வேண்டும் என அதிக ஆர்வத்துடன் உள்ளார். அதேபோல், பருத்திவீரன் சர்ச்சைக்கு முன்பே வாடிவாசலில் அமீர் நடிப்பது சூர்யாவுக்கு தெரியுமாம்.
அதனால், அமீருடன் நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் சூர்யா. ஒருகட்டத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித் நடிக்கலாம் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியாகின. தற்போது இது எல்லாமே வதந்தி என்பதோடு, வாடிவாசல் ஷூட்டிங்கை அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கவும் படக்குழு ரெடியாகிவிட்டதாம்.