சென்னை: கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 32 தேர்வர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணியாணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டுறவுத்துறையில் ஏற்கெனவே 38 மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 5,500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்முகத் தேர்வுக்கு பிறகு, தகுதியானவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. 36 மாவட்டங்களில் இந்த தேர்வுப்பணிகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குறைகள் காரணமாக, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கூட்டுறவு சங்க உதவியாளர்கள் தேர்வு குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விவரம் தெரியாமல் கூறியுள்ளார். கூட்டுறவுத் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய தனிச்சட்டம் உள்ளது.
அந்த சட்டப்படியேஅனைத்தும் பின்பற்றப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலம் தேர்வு நடைபெறுவதற்கான அறிவிப்புகள் ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் எவ்வித தடையும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.