சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.
உலகக் கோப்பை இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடுவது இது 2-வது முறை.
இதற்கு முன்னர் கடந்த 2003 உலகக் கோப்பை இறுதியில் ஆஸி. வசம் இந்தியா தோல்வியை தழுவியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸி.யை வென்று அந்த கணக்கை ஈடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைவரும் ஒரே புள்ளியில் 2003-ல் விட்டதை 2023-ல் இந்தியா கைப்பற்றும் என்று தான் சொல்கின்றனர்.
கடந்த 2003 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், கங்குலி தலைமையிலான இந்திய அணியும் இறுதிப் போட்டியில் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 359 ரன்கள் குவித்தது. இந்திய அணி 234 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியாவும், ரோகித் தலைமையில் இந்திய அணியும் விளையாடி வருகின்றன. இதில் லீக் போட்டியில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா. இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. மொத்தத்தில் எந்தவொரு அணியும் வீழ்த்த முடியாத அணியாக வீறு கொண்ட வெற்றி நடை போட்டு வருகிறது. அதே போல கடந்த 2011, 2015 மற்றும் 2019 ஆகிய உலகக் கோப்பை தொடர்களை நடத்திய நாடுகள் தான் வென்றுள்ளன. இந்த ஸ்டேட்களை வைத்து பார்க்கும் போது இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.