Breaking News
Home / செய்திகள் / பாஜகவை வீழ்த்த ஸ்டாலினின் ‘பக்கா’ ஸ்கெட்ச்! திமுகவின் BLA2 ப்ளான் பற்றித் தெரியுமா?

பாஜகவை வீழ்த்த ஸ்டாலினின் ‘பக்கா’ ஸ்கெட்ச்! திமுகவின் BLA2 ப்ளான் பற்றித் தெரியுமா?

சென்னை: ‘தேர்தல் வரும் பின்னே; நாங்கள் களத்தில் நிற்போம் முன்னே” என்று முழு வீச்சில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2 மாதங்கள் முன்னதாகவே களப்பணியைத் தொடங்கிவிட்டார்.

அதற்கு முன்னதாகவே அதற்கு முன்னதாக ஜூலை பெங்களூருவில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான 26 கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று புதிய பெயரைச் சூட்டி இருப்பதாக அறிவித்தனர்.

6 மாதங்கள் முன்பே திமுக ரெடி!

அதற்கு இதே கூட்டணிக் கட்சியினர் முன்னதாக ஜூன் 23 பீகார் தலைநகர் பாட்னாவில் கூடினர். அதன் பின்பாக விழித்துக் கொண்ட என்.டிஏ கூட்டணி தங்களின் கூட்டணிக் கட்சிக்கான கூட்டத்தைக் கூட்டி நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எப்படிப் பார்த்தாலும் திமுக 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே யூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டது.

இந்த விசயத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியைவிட, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வல்லுநராக இருக்கிறார். மு.கருணாநிதி, தேர்தல் காலங்களில் ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று காத்துக் கொண்டிருப்பார்.

ஆனால், ஸ்டாலினோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என மின்னல் வேக எக்ஸ்பிரஸ் ஆக தன் யுத்திகள் வகுத்து காய்களைக் களத்திற்கு வருவதற்கு முன்பாகவே வெட்டி வீழ்த்தக் கூடிய ராஜதந்திரியாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்.

திமுகவின் BLA2 ஃபார்முலா!

வருகின்ற தேர்தலில் எந்தளவுக்குச் சென்று பாஜகவை வீழ்ந்த முடியுமோ அந்தச் சக்தியைத் தாண்டி தனது சக்தியைச் செலவழித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்காக அவர் கையில் எடுத்திருக்கும் ஃபார்முலாதான் BLA2 . அது என்ன என்கிறீர்களா?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் தேர்தல் கால யுக்திகளை வகுப்பதில் வல்லவரான பிரஷாந்த் கிஷோருடன் கைகோர்த்துப் பல உத்திகளைக் கையாண்டிருந்தார். அந்த உத்திகள் திமுகவை மாபெரும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றிவைக்க உதவியது.

ஆனால், இப்போது திமுக உடன் பிரஷாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ இல்லை. ஆனால், அதைவிட ஆயிரம் மடங்கு யுக்திகளை வகுக்கக் கூடிய வல்லவராக முதலமைச்சர் ஸ்டாலின் உருவாகி இருக்கிறார். அப்படியான யுக்திகளில் ஒன்றுதான் BLA2 . அதாவது இதற்கு ஆங்கிலத்தில் Booth Level Agent -2 என்று பொருள்.

தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சித் தலைமை அளவில்கூட குழுக்களை உறுதி செய்யவில்லை. ஆனால், திமுகவோ இதுவரை மூன்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டது.

இதுவரை 5 மண்டலங்களுக்கான BLA2 கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் பாசறை பயிற்சியாளர் கூட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 68,500 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி என்றால் சாதாரணப் பயிற்சி அல்ல; ஹைடெக் தொழில்நுட்ப பயிற்சிகள்.

களத்தில் 68,500 டி.எம்.கே. ஆர்.மி தயார்!

இந்த BLA2 முதல் கூட்டம் டெல்டா மண்டலமான திருச்சியில் கடந்த ஜூலை 26 அன்று நடைபெற்றது. அதில் மட்டும் 12,000 பேருக்கு முறையாக வாக்குச்சாவடி பற்றிய பயிற்சி வகுப்புகள் மூலம் பல்வேறு விசயங்கள் கற்றுத்தரப்பட்டன.

அடுத்ததாக இரண்டாவது நிகழ்வு ஆகஸ்ட் 17 அன்று தென் மண்டலத்திற்கான ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் 18,000 பேருக்கு முறையாகப் பயிற்சி தரப்பட்டது.

மூன்றாவது பாசறைக் கூட்டமானது காங்கேயத்தில் செப்டம்பர் 24 அன்று கூடியது. அதில் 14 ஆயிரம் பேருக்கு களப்பணிகள் பற்றி பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. 4வது கூட்டம் அக்டோபர் 22 அன்று திருவண்ணாமலையில் நடந்தது. அதில் 12,500 பேர் கலந்துகொண்டனர்.

இறுதியாக இப்போது 5வது வாக்குச்சாவடி பயிற்சி பாசறைக் கூட்டமானது இந்த மாதம் 5 ஆம் தேதி நடந்தது. அதில் 12,000 முறையாகத் தேர்தல் களப்பணிகள் பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி திமுக 5 மண்டலங்களில் தங்களது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை அழைத்து முறையாகப் பயிற்சி அளித்துள்ளது. அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இன்னும் தேர்தல் பற்றி வெளிப்படையாகப் பேசவும் கருத்து தெரிவிக்கவும் கூட தயாராகவில்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது.

திமுக தொடங்கி உள்ள பயிற்சி பாசறைக் கூட்டங்கள் ஏதோ கூட்டத்தைக் காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல. அதிமுக சார்பாகக் கடந்த ஆகஸ்ட் 28 அன்று மதுரையில் மாநாடு நடந்தது.

அந்த மாநாடு பேசப்பட்டதோ இல்லையோ, அங்கே தொண்டர்களுக்காகச் சமைக்கப்பட்டு, வீணாக்கப்பட்ட புளித்துப் போன சாதங்கள் பற்றி அதிகமாகவே பேசப்பட்டது. எந்த முறையான ஏற்பாடுகளும் இல்லாமல் இறுதி நேரத்தில் அம்மாநாடு பிசுபிசுத்துப் போனது.

முதல்வர் ஸ்டாலின் கையில் புள்ளிவிவரம்:

ஆனால் அப்படி இல்லை ஸ்டாலின். ஸ்கெட்ச் போட்டு வேலை செய்துவருகிறார். அவர் ராமநாதபுரத்தில் நடத்திய மீனவர்கள் நல மாநாட்டில் பாஜகவையும் அதிமுகவையும் புள்ளிவிவரங்களோடு மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘பாஜக பாதம் தாங்கிய பழனிசாமி’ என்று புதிய பெயரையும் வைத்து அவர் அழைத்தார். அவர் ‘பாஜக பாதம் தாங்கி’ என்று அடைமொழி கொடுத்த நேரம் இப்போது அந்தக் கூட்டணியே தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டது.

அந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், “”இதே 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி என்ன பேசினார்? ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர்கூட உயிரிழக்க விடமாட்டோம்’ என்று பேசினார்.

ஆனால் இந்த 9 ஆண்டுகால அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படவே இல்லையா?

இதுவரை 48 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டு மீனவர்கள் 619பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியில் ஆட்சியிலும் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம்? மோடியின் ஆட்சி மிகப் பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்” என்று விமர்சித்தார்.

அதை முடித்து வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறைக் கூட்டத்தில் பங்கேற்ற போது, “உள்நாட்டு அமைச்சரோ அல்லது நிதியமைச்சரோ திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால், திமுக சரியான பாதையில் செயல்படுகிறது என்று பொருள். தமிழ்நாட்டில் பாஜகவின் பாதம் தாங்கியாக இருப்பது யார்? பழனிசாமி. அதிமுக ஒரு அடிமை.

திமுகவை விமர்சித்துத்தான் அதிமுகவுக்கு அரசியல் செய்யத் தெரியும். சொந்தமாகச் சொல்லிக் கொள்ள அவர்களுக்கு என்று கொள்கையோ, தியாக வரலாறோ என்று ஒன்றுமே இல்லை.

பாஜக, அதிமுக போன்ற கட்சிகளின் பொய்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சுகின்ற இயக்கமல்ல திராவிட இயக்கம் முன்னேற்றக் கழகம். எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம்தான் நம் திராவிட முன்னேற்றக் கழகம். நாங்கள் மாநிலக் கட்சிதான். நாட்டில் உள்ள மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே மாநிலக் கட்சிதான் திமுக.

BLA2 ஹைடெக் தொழில்நுட்ப வசதி கூட்டங்கள்:

அகில இந்தியக் கட்சிகள் நம் கொள்ளைகளை உணர்ந்து மனமாற்றம் அடைந்துவருகின்றன. நமது கட்சி நாட்டை வழிநடத்தும் கட்சியாக மாறவேண்டும். அதற்குத் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றி ஆகவேண்டும்.

அகில இந்திய அளவில் அதற்காக ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்த இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த ‘இந்தியா’ கூட்டணிதான். ‘இந்தியாவைக் காப்பாற்ற இந்த ‘இந்தியா’வுக்கு வாக்களியுங்கள்’ என்பதுதான் நம் தேர்தல் முழக்கமாக இருக்கப் போகிறது.

பாஜகவை எதிர்ப்பவர்களைப் பார்த்து, ‘ஆண்டி இண்டியன்’ என்று அவர்கள் பழிசுமத்துவது வழக்கம். இப்போது ‘இந்தியா’வை எதிர்க்கும் ஆண்டி இண்டியன்களாக பாஜகவினர் மாறி இருக்கிறார்கள். ஆகவே நம் முன்னால் இருக்கும் கடமை மிகமிகமிகப் பெரியது” என்று அடாத மழையிலும் விடாமல் பொரிந்து தள்ளி இருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக நடத்தும் இந்த BLA2 கூட்டங்கள் பழைய பாணியிலான சாதாரண பொதுக்கூட்டங்களைப் போல இல்லை. அதில், எந்தளவுக்கு நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த முடியுமோ அத்தனை நவீனரக உபகரணங்களையும் பக்கபலமாகத் துணைக்கு வைத்துக் கொண்டு கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது திமுக.

இந்த BLA2 கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் முறையாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் போலிகள் யாரும் ஊடுருவாமல் தடுக்க QR கோட் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த மாவட்டத்திலிருந்து, எந்த ஊரிலிருந்து, எந்தக் கிராமத்திலிருந்து பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்பதை நேரடியாகக் கண்காணிப்பதற்காக புதியதாக டேஷ்போர்டு ஒன்று உருவாக்கப்பட்டும் இருக்கிறது.

இந்த மாதிரியான ஹைஃபைவ் ஆன தொழில்நுட்பங்களை எல்லாம் இதுவரை எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் செயல் வடிவில் நடைமுறைப் படுத்தவில்லை. ஸ்டாலினின் அப்பா மு.கருணாநிதி கையெழுத்து பத்திரிகையை நடத்தி கழகத்தை வளர்த்தார். அவரது மகன் இன்று அக்கட்சியை டேஷ்போர்டு அளவுக்கு முன்னேறிக் கொண்டு சென்றிருக்கிறார்.

தொண்டர்களுக்கு வெறும் தொழில்நுட்பம் அறிவை மட்டும் போதித்தால் அவர்கள் சோர்ந்து போய்விடுவர். அதையும் உணர்ந்து, ஸ்டாலினுடன் நின்று நிழற்படம் எடுக்க ஒரு செல்ஃபி பூத், ‘கலைஞர்100’க்காக ஒரு தனியாக எல்.ஈ.டி வசதி கொண்ட ஒரு செல்ஃபி பூத்.

இவைப் போக ‘திமுக75’ ஆண்டு விழாவைக் கொண்டாட ஒரு செல்ஃபி பூத் மற்றும் #திமுக, ‘உடன்பிறப்பே நினைவு கட்டங்களை அமைத்து அதில் செல்ஃபி எடுப்பதற்கான வசதிகளைச் செய்திருந்தனர்.

தொண்டர்கள் சேகரிக்கும் புதிய டேட்டா!

இந்தப் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி இந்த இரண்டரை ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் விளக்கமாக எடுத்துக்காட்டும் படியான புத்தகம் ஒன்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தின் மூலம் தனது கட்சி இதுவரை என்ன சாதனைகளைச் செய்துள்ளது என்ற செய்தி சாமானிய தொண்டன்வரை போய்ச் சேர்ந்துள்ளது. இதையே அறிவு பரவல் என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.

இந்தப் புத்தகத்தில் உள்ள விவரங்களை வைத்து ஒரு தொண்டன் தனது கட்சிக்காக அடிமட்டத்தில் உள்ள மக்களிடம் அறிவுப்பூர்வமாக வாதாட முடியும். தங்களின் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் பிரச்சாரம் செய்ய முடியும்.

இந்த BLA2 கூட்டத்தின் முக்கிய நோக்கமே D2D தான். அதாவது டோர் டு டோர். வீடு வீடாகச் சென்று தங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கிச் சொல்வது. அப்படி என்றால் அதற்கு உரியத் தரவுகளைத் தரவேண்டும் இல்லையா? அதற்காகவே இந்த அழகான சாதனைப் புத்தகம்.

இவை மட்டுமே அல்ல, பொறுப்பாளர்களிடம் ஒரு படிவமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தப் படிவத்தை ஒவ்வொரு வீடாகக் கொடுத்து, இந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் நீங்கள் பலன் பெற்ற திட்டம் என்ன? ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதைப் பூர்த்தி செய்து பெற வேண்டும். அதன்மூலம் முழுமையான ஒரு டேட்டாவை திமுக தயாரிக்கத் தொடங்கி உள்ளது. அந்தத் தரவுகள்தான் தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றப் போகிறது.

இப்போது புரிகிறதா? திமுக எந்தளவுக்கு ஹைடெக் ஆக யோசித்துச் செயல்பட்டு வருகிறது என்பது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *