சென்னை: கனமழையினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை, போர்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவருகிறது. இந்த மழை விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் நெற்பயிர் மழையில் முழ்கியதால் பெரும் சோகத்தில் உள்ளனர்.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்லா மாவட்டங்கள் தற்பொழுது சம்பா, தாளடி பயிர்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. இந்த நீர் உடனடியாக வடிந்தால்தான் பயிர்களை காப்பாற்ற முடியும். மழைநீர் வடிய வைக்கும் பணியை தாமதம் இல்லாமல் அரசு மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில், எடக்குடி, வடபாதி அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மின் மோட்டார் மூலமும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி செய்துள்ளனர்.
மேலும் சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளார்கள். நேரடி நெல் விதைப்பு என்பது மழையை நம்பியே செய்யப்படுகிறது. ஆனால் அம்மழையே அதிகமானதால் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விவசாயத்தின் எதிர்காலம் தீர்மானிக்க முடியாத சூழ்நிலையே என்றம் நீடிக்கிறது.
தமிழக அரசு விவசாயத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு போர்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்து பயிர்களை காக்க வேண்டும். அதோடு தற்பொழுது வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.