சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21-ல் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்பி ஒருவருக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி,பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவருக்கு உடந்தையாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் உடந்தையாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் சிறப்பு டிஜிபி உள்ளிட்ட 2 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் 68 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றவாளி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணைக்காக ஆஜராக உத்தரவிடப்பட்டது. மேல்முறையீட்டு செய்த ராஜேஷ் தாஸ் வாதத்தை தொடங்காமல் தொடர்ந்து வாய்தாகேட்டதால் விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.