சென்னை: உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை வழக்கு நிமித்தமாக சந்திக்க வரும் போலீஸ் அதிகாரிகளை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை பணி நிமித்தமாக சந்திக்க வரும் போலீஸ் அதிகாரிகளை சில அரசு வழக்கறிஞர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாகவும், ஒருமையில் பேசி திட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற செயல்கள் வருந்தத்தக்கது. ஒரு சிலர் இதுபோல செய்யும் செயல்களால் ஒட்டுமொத்த அரசு வழக்கறிஞர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. வழக்கு நிமித்தமாக சந்திக்க வரும் போலீஸ் அதிகாரிகளை அரசு வழக்கறிஞர்கள் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களது பணிச்சுமை மற்றும் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு மனிதநேயத்துடன் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.