சென்னை: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றத்தில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று தமிழ்நாடு மின் தேவையில் அதிரடி மாற்றம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
பொதுவாகவே வெயில் காலத்தில் மின்சார தேவை அதிகரிப்பது வழக்கம். கடந்த மே, ஜூன் தொடங்கி சென்ற மாதம் வரை மின்சார தேவை அதிகரித்து வந்தது. வெயில் காலம் காரணமாக மக்கள் பலரும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. அதேபோல் மக்கள் பலரும் வீடுகளில் நாள் முழுக்க ஃபேன் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்துவிட்டது.
முக்கியமாக பலர் புதிதாக ஏசி வாங்குகிறார்கள். அதோடு நாள் முழுக்க ஏசியை ஓட விடுவதும் அதிகரித்துவிட்டது. இதனால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியத் துறை வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாட்டில் தினசரி மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 40 கோடி யூனிட்கள் ஆகும். அதன்பின் இந்த நுகர்வு 42 கோடி யூனிட்கள் என்பதை தாண்டி சென்றதும் குறிப்பிடத்தக்கது.
அதிரடி மாற்றம்; இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாடு மின் தேவையில் அதிரடி மாற்றம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு கோடை முடிந்துவிட்டது. அதேபோல் மழை காரணமாக ஏசி தேவை குறைந்துவிட்டது.
இதெல்லாம் போக தீபாவளி காரணமாக அலுவலகங்கள் பல இயங்கவில்லை. பலருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று வரை அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் மின்சார தேவை 27.71 கோடி யூனிட்டாக குறைந்துள்ளது. கடந்த வாரமே மின்சார தேவை 31 கோடி யூனிட்டாக குறைந்தது. தற்போது மேலும் மழை காரணமாக இது குறைந்துள்ளது. இதனால் இனி மின்தடைக்கு வாய்ப்பே இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய மாற்றம்; தமிழ்நாடு மின்சாரத்துறையில் இன்னொரு பக்கம் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் புதிய முடிவு ஒன்றை லண்டன் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பெயரில் அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை மூன்று முறை மீறும் வீட்டு நுகர்வோர் கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மின் பயன்பாட்டாளருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்சார லோடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் அனுமதிக்கப்பட்ட மின்சுமை 8kW ஆகவும், அதைத் தாண்டி 10kW பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
ஒருமுறை லோடு கூடினால் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு வருடத்தில் மூன்று முறை 10kW ஐத் தொட்டால், 10kW உங்கள் இணைப்பு சுமையாக நிர்ணயிக்கப்படும். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்திய கட்டணத்தின்படி 1 கிலோவாட் மூன்று கட்ட இணைப்புக்கான மேம்பாட்டுக் கட்டணங்கள் ரூ. 5,110 மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ. 950/கிலோவாட் ஆகும்.
இந்த லிமிட்டை தாண்டும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.