Breaking News
Home / செய்திகள் / தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது சோகம் கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் விபத்தில் பலி

தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது சோகம் கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் விபத்தில் பலி

சென்னை: தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி திமுக கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் பலியாகினர்.

கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இவர்களுக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை இருந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் காரில் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கார் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது. இதில் சந்தோஷ்குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி தடுப்புச்சுவரில் மோதி சாலையைவிட்டு இறங்கியது. பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தை காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மனைவி இந்துமதி படுகாயமடைந்தார். மற்றொரு காரில் வந்த 5 பேரும் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பனையக்கோட்டையை சேர்ந்தவர் ரவி (50). இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (35), ஐயப்பன் (23). விவசாய கூலி தொழிலாளர்கள். ரவியின் மகளை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்த கட்டக்குடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகளுக்கு தீபாவளி பலகாரங்களை கொடுக்க நேற்றுமுன்தினம் காலை ரவி பைக்கில் சென்றார். அவருடன் சக்திவேல், ஐயப்பன் ஆகியோரும் சென்றனர். பலகாரங்களை கொடுத்து விட்டு 3 பேரும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை ஐயப்பன் ஓட்டினார். மன்னார்குடி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வடுவூர் புதுக்கோட்டை பிள்ளையார் கோயில் அருகே வந்த போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ரவி உட்பட 3 பேரும் இறந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சதுமுகை பகுதியை சேர்ந்தவர்கள் ராகவன் (26), பூவரசன் (24). கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூர் பகுதியை சேர்ந்தவர்கள் மயிலானந்தம் (30), கீர்த்திவேல் துரை (28), இளையராஜா (33). நண்பர்களான 5 பேரும் தீபாவளியை கொண்டாடிவிட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் சத்தியமங்கலம்-கோவை சாலையில் காரில் சென்றுள்ளனர். காரை ராகவன் ஓட்டினார். செண்பகப்புதூர் அடுத்த வேட சின்னானூர் என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர புளிய மரத்தில் மோதியது. இதில் பூவரசன், கீர்த்திவேல் துரை, ராகவன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மயிலானந்தம் இறந்தார்.

வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன்(18), முத்துவேல்(19). கட்டிட தொழிலாளிகள். தீபாவளி கொண்டாட நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் கஸ்பாவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றனர். பைக்கை பாலமுருகன் ஓட்டி உள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய பைக் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இருவரும் கால்வாயில் விழுந்து பலியாகினர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(40), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனது அண்ணன் வெங்கடேசனை தேவிகாபுரம் பேருந்து நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தேவிகாபுரத்தை சேர்ந்த கோட்டி(35), உறவினர் பிரகாஷை பைக்கில் ஏற்றிக்கொண்டு போளூரில் இருந்து தேவிகாபுரம் வந்துள்ளார். முடையூர் அருகே 2 பைக்குகளும் நேருக்குநேர் மோதியதில் சுப்பிரமணி, கோட்டி ஆகியோர் இறந்தனர். பிரகாஷ் சிசிச்சை பெற்று வருகிறார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *