சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, விதிகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும், ரம்மி திறமைக்கான விளையாட்டு என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்த சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது எனவும் இந்த சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமாசுந்தரம், 1930ம் ஆண்டைய தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தில் இணையதளத்தைச் சேர்த்து, 2021ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும், அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது எனவும் வாதிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸார் என 32 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மும்பை மகாதேவ் சூதாட்ட ஆப் ஓனர்களுக்கு தாவுத் இப்ராஹிமுடன் தொடர்பா? அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவல்
அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பிலும் தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.