சென்னை: விதிகளை மீறி வாகனத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் கடந்த 1ம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் அவர் கடைசியாக விபத்தில் சிக்கியது குறித்து, ‘மஞ்சள் வீரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ‘செல்அம்’ பேசியிருப்பது விவாதமாகியுள்ளது.
கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த பைக்குகளில் சாலையில் சாகசம் செய்வது, வேண்டும் என்றே அதிக வேகத்தில் சென்று சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்தார். இது தொடர்பான வீடியோக்களையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது வீடியோக்களை பார்த்து இளைஞர்கள் பலரும் அதி வேகத்தில் வாகனங்களை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
காவல்துறையும் இந்த புகார்கள் தொடர்பாக பலமுறை வாசனை எச்சரித்தது. ஆனாலும் வாசன், தனது தாறுமாறான பைக் சாகசத்தை நிறுத்தியபாடில்லை. இப்படி இருக்கையில்தான் கடந்த மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கினார். சாலையில் வீலிங் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர்.
அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வாசன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. பின்னர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமமும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டது. சிறையிலிருந்த வாசன் பலமுறை ஜாமீனுக்கு முயன்றார். ஆனால் இவரது சாகச வீடியோக்களை பார்த்த நீதிபதி, “ஏன் இவரது பைக்கை எரித்துவிடக்கூடாது? யூடியூப் சேனலை இழுத்து மூடிவிடக்கூடாது?” என்று கேள்வியெழுப்பி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
பின்னர் ஒரு வழியாக கடந்த 1ம் தேதி வாசனுக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்த வாசனை திரைப்பட இயக்குநர் செல்அம் உள்ளிட்டோர் வரவேற்றனர். செல்அம்தான் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், வாசன் விபத்தில் சிக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, “தம்பி என்னைக்கு பைக்கிலிருந்து விழுந்தார் என்று உங்களுக்கு தெரியுமா? அன்றைய தேதி தெரியுமா? அன்று செப்டம்பர் 17. அன்னைக்கு யாருடைய பிறந்த நாள் தெரியுமா? தந்தை பெரியாருடைய பிறந்த நாள். அதேபோல தம்பி எந்த ஊரில் விழுந்தார் தெரியுமா? காஞ்சிபுரத்தில் கீழே விழுந்தார். பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே விழுந்த அன்பு தம்பி டிடிஎஃப் வாசன் மாபெரும் தலைவனாக இந்த தமிழ் மண்ணிலே வருவான், வெல்வான். இதில் எந்த மாற்றமும் இல்லை. தம்பிக்கு கை வலி சரியான பிறகு மீண்டும் இந்த படப்பிடிப்பு துவங்கும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.