சென்னை: உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவிகள் அடங்கிய 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி தேர்வை நடத்தியது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்தது. இத்தேர்வை 12,037 பேர் எழுதினர். தொடர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. அதில் முதன்மை தேர்வு எழுத தற்காலிகமாக 2,544 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதன்மை தேர்வு எழுத 18 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து முதன்மை தேர்வு(மெயின் தேர்வு) எழுத 2,526 பேர் தகுதி பெற்றனர்.
இதில் ஆண்கள் 1191 பேர், பெண்கள் 1334 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர். இந்த நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்கியது. இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மொழியாக்கம் தேர்வு நடந்தது. முதன்மை தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் 25 மையங்களில் நடந்தது. தேர்வு காலை 9.30 மணிக்கு தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வர்கள் காலை 7 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களுக்கு வர தொடங்கினர். அங்கு அவர்கள் இறுதிக்கட்ட தேர்வுக்கு தயாராகின்றனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னை மயிலாப்பூர் பிஎஸ் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். இதே போல மற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பிற்பகல் முதல்தாள் தேர்வு(சட்டம்) நடந்தது. தொடர்ந்து நாளை காலை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகலில் 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தேர்வினை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.