சென்னை: கோவில் காசையோ, பக்தர்கள் காணிக்கையையோ ஒரு ரூபாய் கூட தொட்டதில்லை என மறைந்த பங்காரு அடிகளாரின் இளைய மகன் கோ.ப.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பங்காரு அடிகளார் இளைய மகன்: மருத்துவம், கல்வி ஆகிய இரண்டுக்கும் தனது தந்தை பங்காரு அடிகளார் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும் அதன் படி தாங்களும் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் எனவும் கூறியுள்ளார். பங்காரு அடிகளார் மறைவுக்கு பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை அவரது இளைய மகன் செந்தில்குமார் தான் கவனித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார். இதற்கு ஒரு காரணத்தையும் அவர் சொல்லியிருக்கிறார்.
அக்கறையோடு சொன்ன தந்தை: ஒரு முறை தனது தந்தை பங்காரு அடிகளார் பிறந்தநாளின் போது தன்னை அழைத்து கையை உயர்த்தி பிடித்து நின்று புகைப்படம் எடுக்கச் சொன்னதாகவும் என்னப்பா இது எனக் கேட்டபோது சும்மா தான் என்று அவர் கூறியதாகவும் செந்தில்குமார் நினைவுகூர்ந்துள்ளார். நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும், உடல்நலத்தை கவனமாக பார்த்துக்கொள் என்று தனது தந்தை அக்கறையோடு தன்னிடம் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாத பூஜைக்கு ரூ.1500 ஏன்? தங்களுக்கு என்னென்ன சொத்துக்கள் உள்ளன என்பதை யார் வேண்டுமானாலும் பத்திரப்பதிவு துறை மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் பாத பூஜைக்கு ரூ.1500 வாங்கியது ஏன் என்றால் அந்தத் தொகை முழுவதையும் மருத்துவமனை நிர்வாக செலவுகளுக்கு அப்பா அனுப்பி விடுவார் எனவும் கோ.ப.செந்தில்குமார் தெரிவித்தார். கோவில் காசிலிருந்தோ, பக்தர்கள் காணிக்கையில் இருந்தோ தங்களுக்கு 1 ரூபாய் கூட பங்காரு அடிகளார் கொடுத்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றாக இருக்கிறோம்: தனது அண்ணனுடன் தனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் இப்போதும் எல்லோரும் ஒன்றாக தான் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். வீட்டிற்கு மூத்தவர் தனது அண்ணன் அன்பழகன் என்பதால் அவருடன் கலந்து ஆலோசித்தே எல்லா முடிவுகளையும் எடுப்பதாக தெரிவித்துள்ளார். குடும்பத்துக்காக பங்காரு அடிகளார் எதுவும் செய்யவில்லை என்றும் தங்களை படிக்க மட்டுமே வைத்தார் எனவும் கூறியிருக்கிறார்.