சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நாட்டின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சேகரித்து பின்னர் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, 2012-ல் லோக் ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரன், 2025-ல் தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்த் மற்றும் 2023-ல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, “சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்புவதில், மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கி உள்ளன. மீதமுள்ள மாநிலங்களிடமிருந்து விளக்கங்களை பெற்றபின்னர், தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும்” என விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. எனவே, நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டாலும்கூட, 5 நிமிட தாமதமாகக் கூட ஒளிபரப்பலாம். அந்த இடைவெளியில், அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டு கூட ஒளிபரப்பலாம் எனக் கூறி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.