‘வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரண்டுகட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமலஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உள்ஒதுக்கீட்டில் ஒரு தொகுதியைப் பெற்று அதில் போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியும் கை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். அப்போது அவர் , ‘இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.