சென்னை: வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த பெருமழையால் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்க சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கமுடியாது. அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து கடந்த மாதம் பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதனால் கடந்த வாரம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக நேற்று குறைந்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் வீராணம் ஏரியில் 1,221 மில்லியன் கன அடி(1.2 டி.எம்.சி.) இருப்பு இருந்தது. ஆனால் தற்போது நீர் இருப்பு குறைந்த காரணத்தால் சென்னைக்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) ஆகும். ஆனால் இதில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்து 217 மில்லியன் கன அடி (9.2 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தினமும் சராசரியாக ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, மாதம் 1 டி.எம்.சி. வரை குடிநீருக்கு விநியோகிக்கப்படுகிறது. நீர் வேகமாக குறைவதுடன், வெயில் காரணமாக ஏரிகள் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது, குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 188 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 16, புழல் ஏரியில் இருந்து 189 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 130 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இது தவிர கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் இருந்து கணிசமாக தண்ணீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. இரண்டு நாட்கள் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. நீர் நிலைகள் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டு வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டாலும் ஏரிகளில் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளதால் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்றே நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.