சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே தனது அமைச்சர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 24வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருவதால் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் செந்தில் பாலாஜி.
கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், 266வது நாளாக அவர் சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.