சென்னை: வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். இப்பணியை செம்மைப்படுத்தும் விதமாக 2024-25ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக் கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதே ஆதார் புதுப்பிக்கப்பட்டு வங்கிக்கணக்குடன் ஆதார் பதிவை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வசதியாக சாதி, வருமானம், இருப்பிடச் சான்று மற்றும் முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என 4 வகை சான்றிதழ்களை பெற 6ஆம் வகுப்பு சேரும்போதே தேவையான ஆவணங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். விண்ணப்பங்கள் EMS தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், பின்னர் அதே தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.