சென்னை: அரசியல் சுயலாபத்திற்கு பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை தங்கசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நலதிட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை. நிவாரண நிதியாக தற்போது வரை சல்லி காசு கூட தராமல் வஞ்சிக்கும் பிரதமரை தமிழக மக்கள் வஞ்சிக்க தயாராகி விட்டனர்.
தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒருமுறை கூட மக்களை சந்திக்கவில்லை; பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது; பாஜகவை தமிழகத்தில் தக்க வைத்துக்கொள்ளவும், திமுகவை பார்த்தும்தான் அவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர், தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்கு தமிழ்நாடு வருகிறார். எத்தனை முறை அவர் தமிழகம் வந்தாலும் டெபாசிட் கூட பெற முடியாது இவ்வாறு கூறினார்.