சென்னை: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன், கடந்த 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ்: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்து வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.
நீதிபதிகள்: சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி எப்போது கிடைத்தது?
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: அவரை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு சார்பில் பிப். 22-ம்தேதியே அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
நீதிபதிகள்: மத்திய அரசு முன்கூட்டியே அனுமதி அளித்தும், சாந்தனை இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பாதது ஏன்?
மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா: சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி 24-ம் தேதி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் நகரக்கூட முடியாத சூழலில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். (மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார். சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
மத்திய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டுசெல்ல தூதரக அனுமதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: உயிரிழந்த சாந்தன் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏதுவாக தூதரக அளவிலான சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான பொறுப்பு (‘நோடல்’) அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மார்ச் 4-ம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.
சாந்தன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் அருகே உள்ள கிராமத்துக்கு செல்வதற்காக, அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை 9.45 மணிக்கு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டது.
பின்னர் எம்பார்மிங் செய்யப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணிக்கு சாந்தனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று விமானம் மூலம் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.