சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுபோலீஸார் சோதனை நடத்துவதாக தகவல் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அலுவலகத்துக்கு சென்று படம் பிடிக்க முயன்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவரை கும்பலாக சேர்ந்து சிலர் தாக்கியுள்ளனர்.
மேலும், அவரது வீடியோ கேமராவை பிடுங்கி தனி அறையில் அடைத்து சிறை வைத்துள்ளனர். பின்னர் ஒருவழியாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் செந்தில் புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திமுக பிரமுகர் சிற்றரசுக்கு சொந்தமான சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதை படம் பிடித்த தனியார் செய்தி ஊடகவியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிறுவனம்தான் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது. திமுகவின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
பாமக தலைவர் அன்புமணி: போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுகபிரமுகர் சிற்றரசின் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.
அதனடிப்படையில் படம் பிடிக்கச் சென்றதனியார் செய்தி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்திலை திமுகவினர் பிடித்து அறையில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகளின் சோதனையை செய்தி சேகரிக்கச் சென்றதனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.