சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்துகொண்டன. பேச்சுவார்த்தையின் முடிவில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இரண்டு தொகுதிகளில் போட்டி என முடிவு செய்யப்பட்டாலும், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்று மட்டும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “நடைபெற இருக்கிற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சி சர்வாதிகார ஆட்சி, பாசிச ஆட்சி. இந்த நாட்டை பாசிச பாதையில் அவர்கள் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். இதை தடுத்து நிறுத்தி அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டும். இதனை உணர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திமுகவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
சென்ற முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டோம். எனினும், ஜனநாயகம் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காக இந்த உடன்பாடு செய்துகொண்டோம். எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை. திமுக கூட்டணிக்கு எந்த சிக்கலும் ஏற்படுத்த முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் சிபிஎம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து செயல்பட்டு கடந்த காலங்களில் பாஜகவை வீழ்த்தியுள்ளது. 2019ல் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. ஆனால், இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைவது மட்டுமல்ல, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்யும் பணியை திமுக தலைமையிலான கூட்டணி செய்யும். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வற்புறுத்தினோம். ஆனால், ஏற்கனவே பல கட்சிகள் இருக்கிற வேளையில், வேறு சில கட்சிகளும் திமுக கூட்டணியில் இணையவிருப்பதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் எழுந்தது. எனவே மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது முடிவெடுக்கப்பட்டது.
மற்ற கட்சிகளுடனும் தொகுதி உடன்பாடு என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது முடிவு செய்யப்படும். கமல் உட்பட இன்னும் சிலர் திமுக கூட்டணிக்கு வரவிருக்கிறார்கள். இரண்டு தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் 40 தொகுதிகளிலும் எங்கள் தொகுதிகளாகவே கருதி பணிபுரிவோம்” என்றார்.