சென்னை: அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என பாஜக அரசின் எந்த அணிகள் வந்தாலும் அஞ்சமாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. நலிவுற்ற ஆதிதிராவிடர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்;
ஆதி திராவிடர் சமூகத்திற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்தான் கலைஞர்; கலைஞர் வழியில் செயல்பட்டு வருபவர் முதலமைச்சர். அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும், பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
திமுக மீது கறை பூசுவதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது; அது எப்போதும் நடக்காது. சமூக வலைதளங்களில் கட்சிக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். மதத்தை அரசியலாகவும், அரசியலை மதமாகவும் பார்க்கும் பாசிஸ்டுகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசிடம் முந்தைய அதிமுக அரசு அடக்கு வைத்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரி என பாஜக அரசின் எந்த அணிகள் வந்தாலும் பயப்படமாட்டோம் இவ்வாறு கூறினார்.