சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி ரூ.7 கோடியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்கிழமை 7 குடும்பங்களுக்கு வழங்கினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “தமிழக அரசுப்பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் விருப்பத்தின் அடிப்படையில் இந்நிதியத்தில் சேர்ந்து அவரவர்களின் பங்களிப்பாக 2020, 2021ஆம் ஆண்டில் ரூ.6000 மொத்தமாக செலுத்தினார்கள்.
முதல்வர் ஸ்டாலின் 12.10.2021 அன்று அந்த விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி என்பது ரூ.50 லட்சம் என்று இருந்ததினை ரூ.1 கோடியாக உயர்த்தி அரசாணை பிறப்பித்தார்கள். அதனடிப்படையில் மார்ச் 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் தத்தமது ஊதியத்திலிருந்து ரூ.500 அவரவர்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் அடிப்படையில் 2000 மருத்துவர்கள் மட்டுமே இணைந்திருந்தார்கள். தற்போது இத்திட்டம் 11,000 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து அதனடிப்படையில் மாதந்தோறும் தங்களது ஊதியத்திலிருந்து ரூ.500 பிடித்தம் செய்வதற்கு ஒப்பளித்து இந்த நிதியத்தில் இணைந்து இருக்கிறார்கள். மற்ற மருத்துவர்களும் படிப்படியாக இத்திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இத்திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சங்கங்களின் ஆலோசணையினை பெற்று, 9 மருத்துவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், 4 மருத்தவர்களுக்கு தலா ரூ.1 கோடியும் என்று ரூ.8.50 கோடிக்காண காசோலைகளை, 13.04.2023 அன்று மருத்துவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக 2022 ஆம் ஆண்டு பணியின்போது, உயிரிழந்த 7 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா ரூ.1 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மரு.சஞ்சய்யின் துணைவியார் வி.பூங்குழலி, மரு.எஸ்.மோகன்குமாரின் துணைவியார் எம்.பிரியாவுக்கும், மரு.எஸ்.சின்தன்னின் துணைவியார் சண்முகப்பிரியாவுக்கும், மரு.எஸ்.முகமது ஜாஸ்மினின் தந்தை எஸ்.சிந்தாஷேக்மதாருக்கும், மரு.அருண்குமாரின் துணைவியார் மரு.எஸ்.ரூபகாளீஸ்வரிக்கும், மரு.டி.சிவகுமாரின் துணைவியார் கீதாவுக்கும், மரு.பி.பாஸ்கரனின் துணைவியார் மணிமலருக்கும் தலா ரூ. 1 கோடி சேமநல நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனை நன்குணர்ந்து ஏராளமாணவர்கள் இந்த நிதியத்தின் தாங்களாகவே உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர் என்பது சிறப்பு. தமிழக முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் இரண்டாவது ஆண்டாக ரூ.7 கோடி நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களை பொறுத்தவரை பணி காலத்தில் இறந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழ அரசை பொறுத்தவரை கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவர்களுக்கும், அவர்தம் குடும்ப தாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விரைந்து வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் ஆகிய துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையில் மருத்துவர்களின் நேரடி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குவதில், அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்குவதில் விதிமுறைகள் இல்லை. இதில் மூன்று வகையான பணி நியமனங்கள் வழங்குவதில் விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 வகையான பணியிடங்களை மருத்துவர்களின் வாரிசு தாரர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இளநிலை உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை, அதிகமான காலிப்பணியிடங்கள் இல்லாத சூழலில், அந்த பணியிடங்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இளநிலை உதவியாளர் பணியிடமும் தட்டச்சர் பணியிடமும் ஒரே ஊதிய அளவுடையவை. எனவே இளநிலை உதவியாளர் பணியிடம் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் அந்த பணிக்காக காத்திருக்காமல், 6 மாத காலம் தட்டச்சர் பயிற்சி மேற்கொண்டு விண்ணப்பித்தால், தட்டச்சர் பணியிடத்திற்கான ஆணைகள் வழங்கப்படும். எனவே தட்டச்சர் காலிப்பணியிடங்கள் அதிகம் இருக்கும் சூழ்நிலையில் கருணை அடிப்படையிலான பணியிடங்கள் விரைந்து தருவதற்கு ஏதுவாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.