சென்னை: சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதால் 6000 வெள்ள நிவாரணம் இதுவரை பெறமுடியாத 5.5 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றத்தில் உள்ளன. அரசு அவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இரண்டரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 36 மணி நேரம் இடைவிடமால் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் பல அத்தியாவசிய பொருட்களை இழந்தனர். இதுதவிர கார், இருசக்கர வாகனங்கள் பல வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் முடிந்து இயல்பு நிலை திரும்ப ஒரு வாரம் ஆனது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு 6000 வெள்ள நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் வெள்ள நிவாரணம் அனைவருக்கும் அளிக்கப்படவில்லை.. சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே 6000 ரூபாய் வெள்ள நிவாரணத்தை வழங்கியது. வெளியூர்களில் இருந்து சென்னை வந்தவர்கள், புதிதாக திருமணம் ஆகி குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்கள் உள்பட பலருக்கும் 6000 ரூபாய் வெள்ள நிவாரணம் தரப்படவில்லை-
அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள்து வாழ்வாதாரம் பாதிபபு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
மேலும் அப்படி பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு 6000 வெள்ள நிவாரணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மக்கள் கடந்த டிசம்பர் மாதம் வழங்கினர். சுமார் 5.5லட்சம் பேர் 6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தார்கள். விண்ணப்பித்து இரண்டரை மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தமிழக அரசு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியிடவில்லை..
இதுபற்றி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேயர் பிரியா அளித்த பேட்டியில் “சென்னையில் விடுபட்டவர்களுக்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.. பரிசீலனைக்குப் பின் நிவாரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றார். அதேபோல 5.5 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.3 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்த்து வருவாய் பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் அரசு 5.5 லட்சம் பேருக்கு எப்போது வெள்ள நிவாரணம் அளிக்க போகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்ககவில்லை.. வெறும் அறிவிப்பாகவே நின்றுவிட்டதா என்று பலரும் சந்தேகம் அடைந்துள்ளனர். சென்னையில் வெள்ள நிவாரணம் கிடைக்கப்பெறாத பலர் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஆவார். சென்னையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை எடுத்தால் சென்னையின் புறநகர்களில் வசித்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் தான் இடம் பெறுவார்கள். அப்படிப்பட்ட சூழலில் ரேஷன் கார்டு இல்லை என்ற காரணத்திற்காக 6000 வெள்ள நிவாரணம் இதுவரை மறுக்கப்பட்டு வருவது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.