சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட வானிலை நிலவும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை முடிந்தது முதலே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் தான் பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகும். ஆனால், இப்போதெல்லாம் பிப். மாதமே வெப்பம் உச்சத்தைத் தொடுகிறது. இந்தாண்டில் ஏற்கனவே ஈரோட்டில் ஏற்கனவே சில நாட்கள் வெப்பம் சதமடித்துவிட்டது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அதிக வெப்பம்: தமிழ்நாட்டில் நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர், ராமநாதபுரம், ஈரோடு, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இரு நாட்களுக்கு மழை: இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (பிப். 22) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். நாளை பிப், 23ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நாட்களில் வானிலை: வரும் பிப். 24 மற்றும் பிப். 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல பிப். 26 முதல் பிப். 28 நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் சென்னையில்
என்ன கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை. அதேபோல வரும் நாட்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதுமில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது