சென்னை: மாநிலத்தின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி சர்ச்சை, மாநிலத்திற்கான வரி பகிர்வு போன்ற சலசலப்புகளுக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
அதேபோல பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் பெரும் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் உட்பட 3000 அரசு பேருந்துகள் வாங்கப்படும்
வானிலையை துல்லியமாக கணித்து மழை வெள்ளம் பாதிப்புகளை சரி செய்ய கூடுதலாக 2 டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும் அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.
500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு வழி உயர்மட்ட வழித்தடம் அமைக்க ஆராயப்படும் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு, பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
13,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நியோ டைடல் பூங்காக்கள் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் அமைக்கப்படும் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம். சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு
கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அதிகரிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாகவே இருக்கிறது.
2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44%ஆக இருக்கும். மாநில அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தின் வருவாய் பாதித்திருக்கிறது. அதேபோல கடந்த ஆண்டு வணிகவரி வருவாயும், பத்திரப் பதிவுத்துறை வருவாயும் குறைந்திருக்கிறது.
இந்த ஆண்டில் இதனை அதகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறம் மத்திய அரசின் நிதி பகிர்வு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானியங்களும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது” என்று விளக்கமளித்துள்ளார்l