தேர்தல் பத்திர முறை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து விரிவாக காணலாம்….
அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த சட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ 1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.
இதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திர நடைமுறை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை ரூ.16,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்திரங்கள் விநியோகமாகியிருப்பதும், அதில் பெரும் பங்கு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சென்றிருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது..தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த நிதியாண்டு வரை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ரூ. 12,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றுள்ளன.பாஜக மட்டும் 55 சதவீதத்துக்கும் மேல், அதாவது ரூ. 6,566.11 கோடி நன்கொடை பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி ரூ. 1,123.3 கோடிதிரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ. 1,092.98 கோடிஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி ஆண்டு வரை காங்கிரஸ் நாட்டின் பணக்கார கட்சியாக இருந்த நிலையில், அதன் பிறகு அந்த இடத்தை பாஜக பிடித்துள்ளது.2013-14-ஆம் ஆண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 598 கோடி இருந்த நிலையில் பாஜகவின் வருவாய் 673.8 கோடியாக உயர்ந்தது. அதன் பிறகு, பாஜகவின் வருவாய்
அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 2018-19-ஆம் ஆண்டில் பாஜகவின் வருவாய் ரூ. 2,410 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் (ரூ.1,027 கோடி) வருவாயைக் காட்டிலும் இரு மடங்காகும். அதுபோல, காங்கிரஸின் வருவாய் முந்தைய நிதியாண்டில் ரூ. 199 கோடியாக இருந்த நிலையில், 2018-19-இல் ரூ. 918-ஆக உயர்ந்தது.தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பாஜகவுக்கு கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ. 1,033 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கு ரூ. 236 கோடி கிடைத்தது. 2022-23-ஆம் ஆண்டில் பாஜகவின் மொத்த வருவாய் ரூ. 2,360 கோடி. இதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,300 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.இந்த நிதியாண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 452 கோடி. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 171 கோடி கிடைத்துள்ளது. இதுபோல, 2022-23-ஆம் நிதியாண்டில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 325 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ரூ. 529 கோடியும், திமுகவுக்கு ரூ.185 கோடியும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 152 கோடியும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 34 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளதாக தேர்தல் சீர்திருத்தத்துக்கான சங்கம் தெரிவித்துள்ளது.