சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ்நாடு முழுவதும் 29,009 பள்ளிகள்இயங்கி வருகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
முதல் நாளில் ஒவியம் உட்படகலை மற்றும் தொழிற் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு மையத்தில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. செல்போன் உட்பட மின்னணுப் பொருட்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், மாணவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் மார்ச் 23-ம்தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதிவரையும் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வை சுமார்39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து சுமார் 1.2 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுத இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும். இவ்வாறு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.