Breaking News
Home / செய்திகள் / பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல் செய்திருக்கின்றனர். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று அவர்கள் சாலை மறியல் மேற்கொண்டனர். இரு நாட்களிலும் மறியல் மேற்கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்திய தமிழக அரசு, அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை அன்று மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து 50 கி.மீக்கு அப்பால் உள்ள வல்லக்கோட்டை என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். தங்களை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்ட ராமராஜன் என்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து உதைத்துள்ளனர். இவை அனைத்தும் மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்கள் ஆகும்.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை ஆகும். இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அவர்கள் போராடி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் அவர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் அவர்கள் மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அவர்களின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான். அதற்காக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படப் போவது இல்லை. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை குறித்து அவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, சாத்தியமானவற்றை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *