சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து அமைச்சர். ஏ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து நேற்று மனிதவளம் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தினை கைவிட வேண்டும் என்றும் நிதி நிலைமை சீரடைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என்று தெரிவித்திருந்தார்.
முக்கியமாக அரசின் தேவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தமிழ்நாடு சட்டபேரவை வளாகத்தில் சந்தித்தார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமையில் மொத்தம் 26 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அந்த கோரிக்கையில் 10 அம்ச கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை முதலமைச்சரிடம் கோரிக்கையாக வழங்கினர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றனர். பழைய ஒய்வூதியத் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது. வேலைநிறுத்தம் அறிவித்திருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்: ஜாக்டோ-ஜியோ
நிதி நிலைமை சீரானவுடன் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி தந்துள்ளார். முதலமைச்சர் உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்வரே அழைத்து பேசியுள்ளதால் எங்கள் நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை என்று கூறினர்.