சென்னை: தேமுதிகவின் கொடிநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கட்சிக் கொடியேற்றுவதுடன், முகாம்கள் அமைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்.12-ம் தேதி தேமுதிகவின் 24-ம் ஆண்டு கொடிநாளாகும்.
ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, உணவு, உடை மற்றும் லஞ்சம்-ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி போன்ற புரட்சிகரமான கொள்கைகளை, கொடியை அறிமுகப்படுத்திய அன்று கட்சி நிறுவனர் விஜயகாந்த் உறுதி செய்தார்.
நமது தலைவர் இல்லாத முதல் கொடிநாளில், அனைத்து மாவட்டம், பகுதி, நகரம், ஒன்றியம், கிராமப்புற கிளைகளில் பழைய கொடிகளை அகற்றி, புதிய கொடியை ஏற்ற வேண்டும். கொடிகள் இல்லாத இடத்தில் புதிய கொடிகளை அமைத்து, அங்கு விஜயகாந்த் படத்தை வைத்து, நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைத்து, புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி, அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக தேமுதிகவை வளர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.