சென்னை: முதலமைச்சர் தலைமையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் படி, கூட்டுறவுத்துறை தனக்கென்று சில திட்டங்களை வகுத்து, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களுடைய பணிகள் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் வாரந்தோறும் நம்முடைய பதிவாளர்கள், நம்முடைய கூடுதல் தலைமைச்செயலாளர் எல்லாம் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
அமைச்சர் என்ற முறையில் நானும் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ளுவதோடு, பொதுவாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இருக்கக்கூடிய அலுவலர்களைக் கொண்டு ஒரு ஆய்வுக்கூட்டத்தை நேரடியாக நடத்துவது வழக்கம். அந்த வகையிலான கூட்டம் தான் இன்று இங்கே கூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 12ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள காரணத்தால், கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், இனி புதிய அறிவிப்புகளாக நாம் என்ன அறிவிக்கலாம் என்பது பற்றியும் கலந்தாலோசிக்கும் கூட்டமாகத்தான் நாம் இந்த கூட்டத்தை நடத்திவருகின்றோம். கூட்டுறவுத்துறை பொதுமக்களோடு நெருங்கிய தொடர்புடைய துறை.
அரசு வழங்குகின்ற குடிமைப்பொருட்களை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சென்று சேர்ப்பது மட்டுமில்லாமல், நெருக்கடி காலங்களில் சமீபத்தில் கூட முதலமைச்சர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகையினை அறிவித்தார்கள். அதைப்போல தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த பகுதி மக்களுக்கு நிவாரணத்தொகைகளையும் அறிவித்தார்கள். அதைபோல இப்போது மட்டும் அல்ல சமீபத்தில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி, முதலமைச்சர் அறிவித்த பொங்கல் தொகுப்பினையும் கொண்டு சென்று சேர்ப்பது என அன்றாடப் பணிகளோடு கூடுதல் பணியாக இத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறோம்.
அதைபோல நலிந்த பிரிவினர், கிராமப்புற மக்கள், விவசாயப் பிரிவினர், கால்நடை வளர்ப்போர், விதவைப் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் நிதி உதவிகளை வழங்கி வங்கிசேவையில் ஒரு குறிப்பிடத் தக்க சாதனையினை கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படும் வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பணி முன்னேற்றங்களை ஆய்வு செய்கின்ற கூட்டமாக இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த காலங்களில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 44 அறிவிப்புகளில் 43 அறிவிப்புகள் அரசாணை வழங்கி செயல்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு அறிவிப்பும் இன்னும் ஒரு சில தினங்களில் நடைமுறைக்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மொத்தமாக இன்றைக்கு தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய துணைக் கண்டத்தில் சிறந்த முன்னேறுகின்ற மாநிலமாக நம்முடைய மாநிலம் இருக்கிறது என்ற நற்பெயரைப் பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என்றெல்லாம் பாராட்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட பாராட்டுகளைப் பெறுகின்ற முதலமைச்சர் அவர்களின் கட்டளைகளை சிறப்பாக கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகின்றது என்பதை நான் பெருமையோடு பதிவு செய்கின்றேன்.
கேள்வி : மத்திய அரசு பாரத் அரிசி, பாரத் ஆட்டா, குறைந்த விலை மளிகைப்பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபோல தமிழ்நாடு அரசு ஏதும் அறிவித்துள்ளதா?
பதில்: சில நேரங்களில் ஒன்றிய அரசும் அத்தியாவசியப் பொருட்களை தருவார்கள். அது உணவுத்துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்படும். ஆக இது போன்ற முடிவுகள் உணவுத்துறையின் மூலமாக எடுக்கப்படும். நம்முடைய செயலர் அவர்கள் உணவுத்துறைக்கும் செயலராக உள்ளார். இது பற்றிய அறிவிப்புகள் முறையாக அறிவிக்கப்படவில்லை. செய்தித்தாள்களில் வந்துள்ளது.
கேள்வி : ரேசன் கார்டுகளை உணவுத்துறை வழங்குகிறது. ரேசன் கடைகளை கூட்டுறவுத்துறை நடத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக, ஆறு மாதங்களாக ரேசன் கார்டுகள் வழங்கவில்லை என ரேசன் கடைகளில் தான் பொதுமக்கள் பிரச்சனை செய்கிறார்கள் அது பற்றி…
பதில் : ஏற்கனவே கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்காக புதிது புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தார்கள். ஆகவே, குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்திவைக்க வேண்டும் என விரும்பித்தான் அதை செய்தார்கள். கூடிய விரைவில் தற்போது வழங்குவதற்கான நடவடிக்கைகளை காரணி அடிப்படையில் மேற்கொள்கிறார்கள். நிறுத்தப்பட்ட பணிகள் சில ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அதன் அவசியம் கருதி வழங்கப்படும் இவ்வாறு கூறினார்.