சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்திடம் முறையீடு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்று மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா கருத்து கேட்டறிந்து வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் 79 மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தேமுதிக-வை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக, பா.ஜ.க. தொடர்ந்து முயற்சித்து வரும் சூழலில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள், பிரேமலதாவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையக்கூடாது என பிரேமலதாவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவுடன் செல்வதே நமக்கு நல்லது என்று கருத்து தெரிவித்துள்ள தேமுதிக நிர்வாகிகள், தொகுதி பங்கீட்டில் எந்த சமரசமும் இல்லாமல் நமக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பாஜக தலைமை நம்முடன் இணக்கமாக இருக்கும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் சிலர் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்முடைய விருப்பத்தை, வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைப்பதே நல்லது என்றும் நிர்வாகிகள் பிரேமலதாவிடம் கூறியுள்ளனர்.